தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பு

Latest Comments

No comments to show.

மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையது. அவற்றுள் சித்திரை மாதம் இன்னமும் சிறப்பானது. இம்மாதத்தின் பெளர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இம்மாதம் ‘சித்திரை’ என அழைக்கப்படுகிறது. சூரியன் மீன இராசியில் இருந்து முதலாவது இராசியாகிய மேஷ இராசிக்குள் பிரவேசிக்கின்ற நாளே சித்திரைப் புத்தாண்டாக தமிழர் மற்றும் சிங்களவர்களால் இனமத பேதமேதுமின்றி கொண்டாடப்படுகிறது.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலமானது சித்திரை மாதம் 14/15 ஆக காணப்படுகின்ற போதிலும் அந்த நாளை வரவேற்பதற்கான செயற்பாடுகள் அதற்கு முன்னைய வாரத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. பெரும்பாலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றிற்கு முதல் வாரமே விடுமுறை வழங்கப்பட்டு விடும். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாத்தா, பாட்டி என பல்வேறு பணி நிலைகளில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடிக் குதூகலிக்க இச் சித்திரை வாய்ப்பளிக்கின்றது.

வருஷம் பிறப்பதற்கு முன்பதாகவே மருத்து நீர் வைத்து குளித்தல், சமய நிகழ்வுகள் மற்றும் கைவிசேடம் பெறுதல் என்பவற்றிற்கான நேரம் கொண்டு அனைத்தும் தமிழ்க் காலக் கணிப்பீட்டு முறைப்படி பஞ்சாங்கம் கொண்டு கணிக்கப்படுகிறது. முன்பதாகவே மக்கள் புத்தாண்டை வரவேற்பதற்கான பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்குவதற்காக சந்தை மற்றும் கடைகளில் கூட்டம் கூட்டமாக அலை மோதுவதை காண முடியும். வருஷம் பிறப்பதற்கு முந்தைய நாள் வீடு முழுவதையும் துப்பரவு செய்து, பழையனவற்றை அகற்றி புதிய பொருட்களுடன் புதிய வருஷத்தினை வரவேற்க தயாராக இருப்பர்.

கொண்டாட்டங்கள், பாரம்பரியங்கள் என்பவற்றில் தனித்தன்மை காணப்படினும், புதுவருட தினத்தன்று அதிகாலையில் எழுந்து பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து நீராடுவர். பின்னர் புது மண் பானையில் பொங்கி, புத்தாண்டுப் பலகாரங்கள், பழங்கள் என அனைத்தையும் கடவுளுக்கு படைத்து, பிறந்திருக்கும் வருடம் சகலருக்கும் சகல சௌபாக்கியங்களையும் அளிக்க வேண்டும்’ என வழிபடுவர். கோவிலுக்கு சென்று விஷேட வழிபாடுகளிலும் ஈடுபடுவர்.

‘கைவிசேடம் பரிமாறல்’ என்பது புது வருடத்தின் முக்கியமான சம்பிரதாயங்களில் ஒன்றாகும். பிறந்த வருடத்தில் தமது கொடுக்கல் வாங்கல்கள்  மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு வருடம் பிறந்த பின் அதற்குரிய சுப நேரத்தில் பெற்றார், பெரியோர், குரு முதலானவர்களிடமிருந்து கைவிசேடம் பெற்று பரிமாற்றிக் கொள்வர்.

அத்துடன் பலகாரங்கள், இனிப்புகள் போன்றவற்றை அயலவர்கள், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கி சந்தோஷமாக அளவளாவி மகிழ்வர். அத்துடன் சிறு சிறு கூட்டங்களாக சிறார்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி கிராமிய விளையாட்டுகள் விளையாடி மகிழ்வர்.

மங்களகரமான இந்நாளில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வது அவ் வருடம் முழுவதும் நம்மவர் மனங்களில் மகிழ்ச்சியை நிலைத்து வைக்கச் செய்யும் என்பது நம்மவர்களின் ஐதீகமாகும். அவ்வாறே நாட்டின் அனைத்து மக்களும் இன மத பேதமேதுமின்றி ஒன்றாக வாழ்ந்தால் எல்லோர் வாழ்விலும் சந்தோஷம், செளபாக்கியம் மற்றும் செல்வம் என அனைத்து பேறுகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

CATEGORIES

Uncategorized

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *